திங்கள், 16 மார்ச், 2015

விடில் கண்டேன் 

கவிஞர் பிரபாகரபாபு 



காலைஇளம் பரிதிவரும் அழகைக் கண்டேன் 
கருப்புதிர்ந்து மெலிதாகக் கரையக் கண்டேன் 
வேளைசுப வேளைஎன வண்ணம் தீட்டும் 
விந்தையினைக் கண்டிறைவன் வித்தை கண்டேன் 
சோலையது பணியில்முகம் கழுவிக் கொண்டு 
சுந்தரமாய்ச் செண்டுகளாய்ச்  சிரிக்கக் கண்டேன் 
நாளையொரு வேளைவரும் என்றே நம்பி 
நாட்டியமாய்ப் பூங்கொடிகள் நெளியக் கண்டேன் 

தென்றலுடன் குலவுகின்ற குயில்கள் கண்டேன் 
தாவிமரப் பூக்கொறிக்கும் அணில்கள் கண்டேன் 
அன்றலர்ந்த வாழைஇலைக் கோட்டில் கிளிகள் 
அவசரமாய்ச் செய்திகளைப் படிக்கக் கண்டேன் 
ஒன்றிரண்டு மைனாக்கள் உரக்கக் கூவி 
உயர்ந்துவரும் கதிர்களினை எண்ணக்கண்டேன் 
வென்றுவிடும் கண்ணுருட்டி வெகுண்டாற் போல 
வெப்பமுடன் கதிரவனின் வருகை கண்டேன் 

சூழ்ந்திருந்த இருள்கூட்டம் சொல்லா மலே 
சுடர்கண்டு தோற்றோடிச் சரியக் கண்டேன் 
தாழ்ந்திருந்த புதுவெள்ளி வானில் கோலம் 
தங்கமென மெருகேறித் தவழக் கண்டேன் 
வீழ்ந்திருந்த உடற்கூட்டம் விழித்துக் கொண்டு 
விடிவுகளில் நாட்டமுடன் விரையக் கண்டேன் 
ஆழ்ந்திருந்த கருமையது அகன்றாற் போலே 
அறியாமை அகன்றாலே உலகம் வாழும்!

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கவி பிரபாகர்


தமிழ் கவிஞர் பிரபாகரபாபு ஒரு உயர் நிலை வங்கி அதிகாரி. இந்தியாவின் தலை சிறந்த வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் உதவிப் பொது மேலாளராக பணியாற்றுபவர்.

இவர் தமது சிறந்த இலக்கியத் திறனால் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் சந்தக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், புதுக்கவிதைகள், பொன்மொழிகள், மற்றும் கட்டுரைகள் பலவும் படைத்தது வருபவர்.

சந்தக்கவிதைகள் மற்றும் புதுக்கவிதை நூல்கள் ஐந்தும், ஹைக்கூ கவிதை நூல் ஒன்றும் பொன்மொழி நூல் ஒன்றும் வெளியீடு செய்து பின்னர் சங்கத்தமிழ் இலக்கியங்களான பத்து பாட்டு (பத்து நூல்கள்), குறுந்தொகை (400 பாடல்கள்), ஐங்குறுநூறு (500 பாடல்கள்), நற்றிணை (400 பாடல்கள்), தொடர்ந்து முத்தொள்ளாயிரம் செய்யுள்கள் அனைத்தையும் வார்ப்பிலக்கியங்கள் வடிவில் வெளியீடு செய்து வெற்றி கண்டவர்.

இது தவிர அவ்வையின் ஆத்திசூடி அனைத்தையும் ஒரு பக்கக் கட்டுரை நூலாக வெளியிட்டு பெயர் பெற்றவர். அனைத்திற்கும் சிகரமாக செம்மொழி பாடல் இசை வடிவில் வெளியிட்டு பாராட்டுகள் பெற்றவர்.

ஒரே நூலில் 560 ஹைக்கூ கவிதைகள் எழுதி வெளியிட்டு இதுவரை முறியடிக்கப்படாத சாதனை செய்திருப்பவர்.

 சப்பானிய கவிஞர், தத்துவ ஞானி டைசகு இகேடாவின் Fighting for Peace எனும் பெருமை வாய்ந்த நூலை அமைதிக்கான போராட்டம் எனும் தலைப்பில் வெளியிட்டு புகழ் பெற்றவர்.

இது இவருக்கான சிறிய அறிமுகம் மட்டுமே. முழுமையான விபரங்களுக்கு Facebook இணையத்தில் prabhakarababu poet தேடலிலும், linkedin.com இணையத்தில் prabhakarababu (poet) கண்டு அறியலாம்.

please go to facebook to see profile: https://www.facebook.com/#!/profile.php?id=100002847534225
please go into linkedin to see profile: http://www.linkedin.com/profile/edit?trk=tab_pro

புதன், 25 ஏப்ரல், 2012

ஹைக்கூ கவிதைகள் 3

கவிஞர் பிரபாகரபாபு


பூவா தலையா போட்டதும் விழுந்தது
தலையைத் தொடர்ந்து பூ
விதவை

நிறைவேறாத ஆசைகளால்
சோர்வது இல்லை மனது
தொடர்ந்து சுரக்கும் தேவைகள்

தாங்க முடியாதபோது
தீட்சண்யமாய் இமை விரிக்கும்
நெற்றிக்கண்

வண்டியில் ஓடம்
ஓடத்தில் ஒரு நாள் வண்டி
என்னுள் தஞ்சமான நிழல்

கலங்கரை விளக்கு
தூரத்தில் மின்மினி
புத்தகப் பையுடன் பள்ளிக்குழந்தை





ஹைக்கூ கவிதைகள் 2




எத்தனை நாள் சுமப்பது
பாதங்களின் சலிப்பு
தடுமாறும் முதியவர்

லாட்டரி குலுக்கல் முடிவு
கவுரவ பதவி கிடைத்தது
காலனின் பதிவேடு

பிரமிடுகளின் மேல்
நீயா நானா
தாம்பத்ய சறுக்கல்

வானம் பிடிக்க ஆசை
உற்சாகக் கிளைகள்
ஆளுக்கேற்ற அளவு

மேல் தட்டில் நிறப்பிரிகை
ரோசாக்கள் குழைப்பு
குழந்தைத் தொழிலாளிகள்

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

நானும் நீயும் !


காலம் கிழித்தெறிந்த
தேதிகளைச் சேகரித்து

தேய்ந்த நாட்களைத்
தேடிப்பார்க்கிறேன்!


என் சுய சரித்திரத்தின்
ஆரம்ப ஏடுகளைப்
புரட்டிப்பார்க்கிறேன்!


என் தாயும் தந்தையும்
மரபு மீறாமல் எழுதிய
மங்கலக்கவிதையாக நான் !


தங்கத்தமிழே!
அன்று
உன் நேச விரல்கள் அல்லவோ
கேசம் கோதி உச்சி முகர்ந்து

என் முதல் சுவாசத்திற்கு
முன்னுரை எழுதியது ?

நீயல்லவோ இந்த
மானுடத்தின் ஒலிகளை
செல்லமாய் என் செவிக்குள் இட்டு
என் சிறு காந்தக் கண்களுக்குள்
ஒளி துருவங்கள் நாட்டினாய்?
காலத்தைக் கரைத்து நான்
வளர்ந்தபோது
என்னைத் தத்தெடுத்த உனக்குக்
கொத்தடிமை ஆனேன்!
என்னைத் தெரிகிறதா?
நான் உன் மடிக்குழந்தை !


இன்னும் சொல்வேன் .........

சனி, 7 ஏப்ரல், 2012

ஹைக்கூ பூம்பொழில் 1 !



வைகறை ஓவியங்கள்
பறவைகளின் பாசுரங்கள்
அனுதினம் எனக்கு

பற்று இல்லாதபோது
முழுமையும் பிரகாசமும்
தாமரை இலைத்துளி

அபாய நிலைக்கு மேல்
மட்டம் உயர்வு
ஐயோ வறுமைக்கோடு

விண்ணில் வலை வீசுவதில்லையே
மீன்களின் துக்கம்
மகிழ்ச்சியோடு நிலா

நன்மைகளும் தீமைகளும்
சுற்றிலும் ஆரங்களாகி
காலச்சக்கரம்