திங்கள், 16 மார்ச், 2015

விடில் கண்டேன் 

கவிஞர் பிரபாகரபாபு 



காலைஇளம் பரிதிவரும் அழகைக் கண்டேன் 
கருப்புதிர்ந்து மெலிதாகக் கரையக் கண்டேன் 
வேளைசுப வேளைஎன வண்ணம் தீட்டும் 
விந்தையினைக் கண்டிறைவன் வித்தை கண்டேன் 
சோலையது பணியில்முகம் கழுவிக் கொண்டு 
சுந்தரமாய்ச் செண்டுகளாய்ச்  சிரிக்கக் கண்டேன் 
நாளையொரு வேளைவரும் என்றே நம்பி 
நாட்டியமாய்ப் பூங்கொடிகள் நெளியக் கண்டேன் 

தென்றலுடன் குலவுகின்ற குயில்கள் கண்டேன் 
தாவிமரப் பூக்கொறிக்கும் அணில்கள் கண்டேன் 
அன்றலர்ந்த வாழைஇலைக் கோட்டில் கிளிகள் 
அவசரமாய்ச் செய்திகளைப் படிக்கக் கண்டேன் 
ஒன்றிரண்டு மைனாக்கள் உரக்கக் கூவி 
உயர்ந்துவரும் கதிர்களினை எண்ணக்கண்டேன் 
வென்றுவிடும் கண்ணுருட்டி வெகுண்டாற் போல 
வெப்பமுடன் கதிரவனின் வருகை கண்டேன் 

சூழ்ந்திருந்த இருள்கூட்டம் சொல்லா மலே 
சுடர்கண்டு தோற்றோடிச் சரியக் கண்டேன் 
தாழ்ந்திருந்த புதுவெள்ளி வானில் கோலம் 
தங்கமென மெருகேறித் தவழக் கண்டேன் 
வீழ்ந்திருந்த உடற்கூட்டம் விழித்துக் கொண்டு 
விடிவுகளில் நாட்டமுடன் விரையக் கண்டேன் 
ஆழ்ந்திருந்த கருமையது அகன்றாற் போலே 
அறியாமை அகன்றாலே உலகம் வாழும்!